தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத்தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட த.அமிர்தகுமார்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திருமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நூற்றாண்டு பாரம்பரிய மிக்க தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத்தலைவராக போட்டியின்றி இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.த.அமிர்தகுமார் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திருமிகு.மு.க.ஸ்டாலின் அவர்களை அதிகாரப்பூர்வமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.

இச்சந்திப்பில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு நிலுவை கோரிக்கைகளை வழங்கியதுடன்,விரைவில் அறிவித்திடவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

30.09.2025-க்குள் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் திரு.ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழுவின் அறிக்கையை பெற்று,விரைவில் நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததுடன், மீதி இருக்கின்ற நிலுவை கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்கள்.

மேனாள் மாநிலத்தலைவர் திருமிகு.சிவ.இளங்கோ அவர்களுடைய திருஉருவ சிலை அரசின் சார்பில் அமைக்கப்பட வேண்டும் எனவும்,அவர் பணிபுரிந்த அலுவலக வளாகத்திற்கு அவரது பெயரை சூட்டிட வேண்டும் உள்ளிட்ட அமைப்பு சார்பிலான கோரிக்கைகளுக்கான கடிதங்களையும் வழங்கி,ஏறக்குறைய 25 நிமிடங்கள் நிறைவாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

மீண்டும் மாநிலத்தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு,முன்னாள் மாநில முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஆட்சியில் எப்படியெல்லாம் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டதோ,அதைப்போலவே எனது தலைமையிலான ஆட்சியிலும் உங்கள் தலைமையிலான சங்கத்திற்கு தொடர்ந்து முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என தமிழ்நாடு முதலமைச்சராக தங்களுக்கு உறுதியளிப்பதாக கூறியதுடன்,இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வான உங்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவிப்பதாக தெரிவித்தார்கள்.

இச்சந்திப்பில் மாநிலத்தலைவராகிய திரு.அமிர்தகுமார் அவர்களுடன்,மாநில துணைத்தலைவர்கள் திரு.ஆர்.சி.எஸ்.குமார், திரு.அ.வெங்கடேசன், மாநிலப்பொருளாளர் திருமதி.வே.திரவியத்தம்மாள், மாநில தலைமை நிலையச்செயலாளர் திரு.மா.அதிகமான்முத்து, மாநிலச்செயலாளர் திரு.இரா.அருள்ராஜ், மாவட்டத்தலைவர்கள் வட சென்னை திரு.து.தேவராஜ், தென் சென்னை திரு.வா.பன்னீர்செல்வம், மேற்கு சென்னை திரு.எம்.நித்தியானந்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.